கருவக்காட்டில் பெண்ணின் எலும்புக்கூடு
திரு-பட்டினம் அருகே கருவக்காட்டில் பெண்ணின் எலும்புக்கூடு கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரு-பட்டினம்
திரு-பட்டினம் அருகே கருவக்காட்டில் பெண்ணின் எலும்புக்கூடு கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் எலும்புக்கூடு
காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் காந்தி சாலையை சேர்ந்தவர் அமுல்தாஸ். இவர், கருவை காடுகளை ஏலம் எடுத்து அதனை வெட்டி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கீழையூர் தெற்கு வடிகால் வாய்க்கால் அருகே உள்ள கருவக்காட்டில் மரம் வெட்ட சென்றார்.
அப்போது, 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் எலும்புக்கூடு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், வடக்கு வாஞ்சூர் கிராம பஞ்சாயத்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து எலும்புக்கூடை பார்வையிட்டனர். தலை, கை, கால், உடல் தனித்தனியாக கிடந்தது. அதன் அருகே பச்சை நிற புடவை, சிவப்பு நிற கட்டம் போட்ட ஜாக்கெட், கருப்பு நிற பாவாடை கிடந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, எலும்புக்கூடாக கிடந்த பெண் யார், அவர் கொலை செய்யப்பட்டு கருவக்காட்டில் வீசப்பட்டாரா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.