காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் சாவு

விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்ற இடத்தில் தீக்குளித்த பெண் இன்று உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

Update: 2023-09-28 17:00 GMT

புதுச்சேரி

விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்ற இடத்தில் தீக்குளித்த பெண் இன்று உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன்

புதுவை காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்த மீனவர் சந்திரன். அவரது மனைவி கலைச்செல்வி (வயது 35). இவர் அதே பகுதியை சேர்ந்தவரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரியும் ஏழுமலை என்பவரது மனைவி ராஜகுமாரிக்கு ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை திரும்ப பெறுவது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடன் வாங்கிய ராஜகுமாரி காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் இருதரப்பினையும் போலீஸ் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சிகிச்சை பலனின்றி சாவு

அப்போது போலீசார் கடன் வாங்கிய ராஜகுமாரியை பெஞ்சில் உட்கார வைத்தும், சந்திரன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வியை குற்றவாளிகள்போல போலீஸ் நிலையத்தில் நிற்கவைத்தும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

கடன் கொடுத்த தன்னை போலீசார் வேண்டும் என்றே அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும், ரூ.5 லட்சத்தை போலீசார் பெற்றுத்தரவில்லை என்றால், இங்கே தீக்குளிப்பேன் என சத்தமாக குரல் கொடுத்தார். அதை போலீசார் பெரிதுபடுத்தாமல் சும்மா... இரும்மா, உனக்காகத்தான் பேசுகிறோம் என தெரிவித்துள்ளனர். போலீசாரின் அலட்சியபேச்சால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி போலீஸ் நிலைய வளாக பகுதியிலேயே பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இ.சி.ஆர்.சாலையில் மறியல் போராட்டமும் மற்றும் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.

இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்த கலைச்செல்விக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

ரங்கசாமியுடன் சந்திப்பு

இந்த நிலையில் கலைச்செல்வியின் உறவினர்கள் இன்று மீண்டும் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த நிலையில் காலப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, நாகராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் முற்றுகையை கைவிட்டு, புதுவை சட்டசபைக்கு வந்தனர். அங்கு முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் மீனவ பஞ்சாயத்தார்களும் கலந்துகொண்டனர்.

ரூ.20 லட்சம் நிவாரணம்

அப்போது இறந்த கலைச்செல்வியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும், காவல்நிலையத்தில் பணியாற்றும் அத்தனை போலீசாரையும் இடமாற்றம் செய்யவேண்டும். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதுவரை கலைச்செல்வி உடலை வாங்கமாட்டோம் என்றும் கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, போலீசாரின் செயல்பாடு தொடர்பாக கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும், இறந்த கலைச்செல்வியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

போலீசாருக்கு எதிராக கோஷம்

இதைத்தொடர்ந்து அவர்கள் சமாதானமடைந்து உடலை வாங்கிக்கொள்வதாக தெரிவித்துவிட்டு சென்றனர். அவர்கள் சட்டசபையை விட்டு வெளியே வரும்போது போலீசார் சிலர் அவர்களை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சட்டசபை வாசலிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களை போலீசார் மீண்டும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்