கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை
70 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்த நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்த கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
வில்லியனூர்
70 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்த நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்த கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஐ.டி. நிறுவன ஊழியர்
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், சண்முகாபுரம் மங்கலட்சுமி நகரை சேர்ந்த காயத்ரி (வயது 34) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது மனோஜ்குமார் வீட்டார் 100 பவுன் நகை, கார் மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கேட்டுள்ளனர். ஆனால் காயத்ரி வீட்டார் 70 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 வீட்டு மனைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். மேலும் திருமண செலவையும் அவர்களே ஏற்றிருக்கிறார்கள்.
கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை
இந்த நிலையில் காயத்ரியின் மாமனார் ராமமூர்த்தி, மாமியார் லோகசுந்தரி ஆகிய 2 பேரும், திருமணத்தின்போது பேசிய நகைகளை முழுவதுமாக கொடுக்க வேண்டும், அப்போதுதான் தங்கள் மகனுடன் சேர்ந்து வாழ முடியும் என்று கூறியுள்ளனர். பிறகு அதனையும் காயத்ரி வீட்டார் கொடுத்து விட்டனர்.
இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த காயத்ரியிடம், கர்ப்பத்தை கலைக்குமாறு அவரது மாமியார் லோகசுந்தரி கூறியுள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
குளிப்பதை எட்டிப்பார்த்த மாமனார்
பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த காயத்ரி, குழந்தை பிறந்ததும் சில மாதங்கள் கழித்து கணவர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் குளிக்கும் போதும், படுக்கும் போதும் அவரது மாமனார் ராமமூர்த்தி எட்டி பார்த்ததாக கூறப்படுகிறது.
அதனை காயத்ரி தட்டிக்கேட்ட போது, என் மகனை விவகாரத்து செய்துவிடு, இல்லையென்றால் கூடுதலாக வரதட்சணை வாங்கி வா என்று கூறி குடும்பத்துடன் சித்ரவதை செய்துள்ளனர்.
கூடுதலாக 50 பவுன் வரதட்சணை
தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் காயத்ரி, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் புதுச்சேரி சாரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார்.
சில மாதங்கள் சந்தோஷமாக இருந்த நிலையில் மனோஜ்குமார், மீண்டும் காயத்ரியிடம் தகராறு செய்து அவரை தாக்கினார். அதன்பின் மாமனார் ராமமூர்த்தி, காயத்ரி வீட்டிற்கு வந்து, கூடுதலாக 50 பவுன் நகையை வரதட்சணையாக வாங்கி வந்தால் மட்டுமே என் மகனுடன் சேர்ந்து வாழ விடுவேன் என்று கூறிவிட்டு மகன் மனோஜ்குமாரை அவரது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.
3 பேர் மீது வழக்கு
இது குறித்து காயத்ரி வில்லியனூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்பேரில் மனோஜ்குமார், மாமனார் ராமமூர்த்தி, மாமியார் லோகசுந்தரி ஆகிய 3 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.