நடுரோட்டில் துணி துவைத்து சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை சலவை தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நடுரோட்டில் துணி துவைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
அரும்பார்த்தபுரம், பூரணாங்குப்பம், கரிக்கலாம்பாக்கம், நெல்லித்தோப்பில் புதிய சலவைத்துறைகள் கட்டித்தர வேண்டும், அனைத்து சலவைத்துறைகளிலும் தண்ணீர், மின்சார வசதி, துணி பாதுகாப்பு அறைகள், துணி உலர்கூடம் மற்றும் கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று புதுவை பிரதேச ரஜகுலத்தோர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற உள்ளாட்சித்துறையை வலியுறுத்தி புதுவை சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடுரோட்டில் துணிகளை துவைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை பிரதேச ரஜகுலத்தோர் நலச்சங்க தலைவர் ஆறுமுகம், கவுரவ தலைவர் முத்து ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநில செயலாளர் முத்தா பலராமன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். துணை தலைவர்கள் பெருமாள், பழனிசாமி, முனுசாமி, பொருளாளர் பார்த்தசாரதி, மகளிர் அணி தலைவி அங்கம்மாள் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.