பொதுப்பணித்துறை அலுவலகத்தை பணிநீக்க வவுச்சர் ஊழியர்கள் முற்றுகை
புதுவையில் மீண்டும் பணி வழங்கக்கோரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை பணிநீக்கம் செய்யப்பட்ட வவுச்சர் ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி
மீண்டும் பணி வழங்கக்கோரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை பணிநீக்கம் செய்யப்பட்ட வவுச்சர் ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
வவுச்சர் ஊழியர்கள்
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வவுச்சர் ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். சில மாதங்களில் தேர்தல் கமிஷன் மற்றும் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 2,638 வவுச்சர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எனவே அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோரி போராட்ட குழுவை உருவாக்கி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பணிநீக்கம் செய்யப்பட்ட வவுச்சர் ஊழியர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட வவுச்சர் ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஊழியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பணிநீக்க வவுச்சர் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களிடம் அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 2 நாட்களில் அதற்கான கோப்புகளை தயார் செய்வதாக உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பணிநீக்க வவுச்சர் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் சிலர், முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.