பொதுப்பணித்துறை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகை

ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகையிட்டனர்

Update: 2023-09-06 16:53 GMT

புதுச்சேரி

ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கக்கோரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.

வவுச்சர் ஊழியர்கள்

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தனர். அவர்களுக்கு சம்பளம் ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார். ஆனால் இதுவரை உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து அவர்கள் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ். பணிகளை வவுச்சர் ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

முற்றுகை

இந்தநிலையில் இன்று காலை அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்திற்கு அரசு பணியாளர் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் சட்டசபை வளாகத்திற்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அவர், கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்