வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம்

2 ஆண்டுகளுக்குப் பின் நடந்த வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-08-19 16:14 GMT

அரியாங்குப்பம்

2 ஆண்டுகளுக்குப் பின் நடந்த வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆடி தேரோட்டம்

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டிற்கான வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் ஆடி தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைமுன்னிட்டு தினசரி இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது. அதையொட்டி காலை 8.30 மணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

விழாக்கோலம்

அலங்கரிக்கப்பட்ட செங்கழுநீரம்மன் தேரில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தேரை வீராம்பட்டினத்தை சுற்றியுள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இழுத்தனர். தேர் மாடவீதி வழியாக வந்து மீண்டும் கோவிலை அடைந்தது.

விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், சம்பத், சிவசங்கரன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தேரோட்டத்தையொட்டி வீராம்பட்டினமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்லால் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தேரோட்டத்தை காண புதுச்சேரி, தமிழக பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து இருந்தனர்.

சமபந்தி விருந்து

விழாவையொட்டி அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்கினர். மேலும் அங்கு நடந்த சமபந்தி விருந்தினை, முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் மக்கள் குழுவினர் செய்திருந்தினர்.

தோரோட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தற்காலிக புறக்காவல் நிலையம் அமைத்தும், சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. வீராம்பட்டினம் தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது.

செங்கழுநீரம்மன் கோவில் ஆடி தேரோட்ட விழாவில் இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. வருகிற 26-ந் தேதி முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்