வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் ஊர்வலம்

புதுவையில் நேரடி போட்டித்தேர்வுகள் மூலம் அரசு பணியிடங்களை நிரப்பக்கோரி பட்டதாரி இளைஞர்கள் ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினார்கள்.

Update: 2023-06-22 17:24 GMT

புதுச்சேரி

நேரடி போட்டித்தேர்வுகள் மூலம் அரசு பணியிடங்களை நிரப்பக்கோரி பட்டதாரி இளைஞர்கள் ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினார்கள்.

போட்டித்தேர்வு

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்து உள்ளனர். இதனிடையே உதவியாளர் பணியிடங்கள் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன.

அதாவது, உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பவேண்டும் என்று அரசுப்பணியில் உள்ள மேல்நிலை எழுத்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் இந்த பணியிடங்களை நேரடி போட்டித்தேர்வு மூலம் நிரப்பவேண்டும் என்று பட்டதாரி இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி இளநிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் பணியிடங்களை அதிக அளவில் நிரப்பவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊர்வலம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் இன்று புதுவை சுதேசி மில் அருகே கூடினார்கள். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலை சந்திப்பினை அடைந்தது. அதற்கு மேல் செல்லவிடாமல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது இளம்பெண்கள் சிலர் போட்டித்தேர்வு மூலம் அரசு காலி பணியிடங்களை நிரப்பக்கோரி கண்ணீர்மல்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இது பரிதாபமாக இருந்தது.

இதையடுத்து ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் சிலரை மட்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க போலீசார் அழைத்துச்சென்றனர்.

ரங்கசாமியுடன் சந்திப்பு

அப்போது இளைஞர்கள் அலெக்ஸ், ராம்குமார், தியாகராஜன் உள்பட 10 இளைஞர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

மனுவினை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி, பணி நியமன விதிகளின்படி தேர்வுகள் நடைபெறும் என்று பட்டதாரி இளைஞர்களிடம் உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்