வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல்

புதுவை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் தீர நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.;

Update:2023-07-24 22:56 IST

புதுச்சேரி

வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் தீர நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரபரப்பான சந்திப்பு

புதுவை மறைமலையடிகள் சாலை-கடலூர் சாலை சந்திப்பில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை ரவுண்டானா (சதுக்கம்) உள்ளது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் கடலூர், விழுப்பும், சென்னை உள்ளிட்ட அனைத்து பஸ்களும் இந்த ரவுண்டனாவை சுற்றித்தான் செல்ல வேண்டும். இதனால் எப்போதும் இந்த சந்திப்பு பரபரப்புடன் காணப்படும். அதுமட்டுமின்றி புதுவை நகரப்பகுதிக்கு வருபவர்களும் இந்த வழியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் இருசக்கர வாகனங்களும் இந்த சந்திப்பில் அதிக அளவில் கடந்து செல்கின்றன.

இதன் காரணமாக காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை இந்த சந்திப்பு பரபரப்பாகவே காணப்படும். இங்கு வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையை சுற்றி நீரூற்றுடன் கூடிய ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரவுண்டான மிகவும் பெரிதாக உள்ளது.

இதனால் வாகனங்கள் சுற்றி வருவதில் சிரமம் ஏற்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் சாலை விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகின்றன.

ரவுண்டானா சுருக்கப்படுமா?

இதை தவிர்க்க பஸ் மற்றும் இதர வாகனங்கள் எளிதாக சுற்றி செல்லும் வகையில் ரவுண்டானாவின் அளவை சுருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சுதேசி மில் அருகே சாலையை அடைத்துக்கொண்டு அடிக்கடி போராட்டங்கள் நடப்பதால் இங்கு நாள்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிப்பது என்பது வாடிக்கையாக உள்ளது. எனவே இதுபோன்ற பிரதான சாலையில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்க கூடாது. மாறாக ரோடியர் திடலுக்கு மாற்றி அனுமதி அளிக்கலாம்.

தற்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் பொதுப்பணித்துறை பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ரவுண்டானாவை குறுகியதாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்