ரெயில்வே கேட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

புதுவை- கடலூர் சாலை ரோடியர்பேட் ரெயில்வே கேட் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

Update: 2023-06-27 16:55 GMT

புதுச்சேரி

புதுவை- கடலூர் சாலை ரோடியர்பேட் ரெயில்வே கேட் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

போக்குவரத்து நெரிசல்

புதுவையில் வாகன பெருக்கம், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகை தருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. அண்ணா சாலை, புஸ்சி வீதி, நேரு வீதி, ரெட்டியார்பாளையம், மரப்பாலம் ஆகிய முக்கிய சந்திப்புகளில் காலை, மாலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போலீசார் நியமிக்க வேண்டும்

புதுவை- கடலூர் சாலை ரோடியர்பேட் ரெயில்வே கேட் பகுதியில் கேட் மூடப்பட்ட வேளையில் சாலையின் இருபக்கமும் எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்களுக்கு வழிவிடாத வகையில் வாகன ஓட்டிகள் நின்று விடுகிறார்கள். கேட் திறக்கப்பட்ட உடன் இருபக்கமும் இருந்து வரும் வாகன ஓட்டிகள் முண்டியத்து செல்ல முயல்வதால் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. மேலும் அங்கு போக்குவரத்தை சீர் செய்ய போலீசாரும் நிற்பதில்லை. குறிப்பாக யாருமே போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விதிமீறல்களில் ஈடுபட்ட பஸ் உள்ளிட்ட வாகனங்களை பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். ஆனால் இப்போது மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டு வருகிறது.

அதை தவிர்க்க ரெயில் வரும் நேரங்களில் அங்கு போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும், விரைவில் ரெயில்வே மேம்பாலம் கட்டவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்