சுற்றுலா படகுகளை முறைப்படுத்த வேண்டும்
புதுவையில் சுற்றுலா படகுகளை முறைப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் உள்நாட்டு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி
புதுவை நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு, அரியாங்குப்பம் ஆறு உள்ளிட்டவற்றில் சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகள் இயக்கத்தால் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மீனவர் விடுதலை வேங்கைகளின் அமைப்பாளர் மங்கையர்செல்வன், திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு. அய்யப்பன், தமிழர் களம் தலைவர் அழகர், நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ், பெரியார் சிந்தனையாளர்கள் இயக்க தலைவர் தீனா மற்றும் சமூக அமைப்பினர் மீனவர்களுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது சுற்றுலா படகுகளின் இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
சுண்ணாம்பாறு, அரியாங்குப்பம் ஆறுகளில் பெருமளவு கழிவுநீர் கலப்பதால் மீன்கள் செத்துப்போவதாகவும், கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில்விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமியும் உறுதியளித்தார்.