"தி.மு.க.வின் கைப்பாவையாக கவர்னர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்" - மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேச்சு

புதுச்சேரியில் முதல்-மந்திரியும், கவர்னரும் இணைந்து மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதாக எல்.முருகன் கூறினார்.

Update: 2022-11-05 12:29 GMT

புதுச்சேரி,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக புதுச்சேரி வந்துள்ளார். இதையடுத்து இன்று அவர் கட்சி அலுவலகத்தில் பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த போது எல்.முருகன் கூறியதாவது;-

"புதுச்சேரியை பொறுத்தவரை முதல்-மந்திரியும், கவர்னரும் இணைந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் பணி செய்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க.வினர் நீட்டும் கோப்புகளில் கவர்னர் கையெழுத்து போட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் கவர்னர் கேள்வி கேட்கிறார். இதனால் அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். தி.மு.க.வின் கைப்பாவையாக கவர்னர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பது ஒருநாளும் நடக்காது."

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்