20 பவுன் நகை, வெளிநாட்டு பணம் திருட்டு

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் வெளிநாட்டு பணத்தை திருடிய வேலைக்கார பெண் கணவருடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-07 12:22 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் வெளிநாட்டு பணத்தை திருடிய வேலைக்கார பெண் கணவருடன் கைது செய்யப்பட்டார்.

பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண்

புதுச்சேரி லாஸ்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி பாலசுப்பிரமணியம் (வயது 51). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவர் தனது மாமியார் சுசிலா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இவர்களது வீட்டில் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி உஷா (37) வேலைக்காரியாக பணி செய்து வந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் சுசிலா, தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வீட்டின் அலமாரியில் இருந்த நகைகளை எடுத்து அணிந்து சென்றார். பின்னர் அந்த நகைகளை மீண்டும் அலமாரியில் வைத்து பூட்டினார். அதன்பிறகு லட்சுமி பிரான்ஸ் நாட்டிற்கு சென்று விட்டார். சுசிலா மட்டும் வீட்டில் இருந்தார்.

20 பவுன் நகை திருட்டு

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரி திரும்பிய லட்சுமி, அலமாரியில் இருந்த நகைகளை சரிபார்த்தார். அதில் தங்க சங்கிலி, நெக்லஸ், வளையல், மோதிரம் உள்ளிட்ட 20 பவுன் நகைகள் மற்றும் 60 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் திருடு போனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி, அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது, நகைகள் மாயமானது குறித்து யாருக்கும் தெரியவில்லை.

இதையடுத்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் அளித்தார். அதில், தனது வீட்டு வேலைக்கார பெண் உஷா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் உஷாவை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது, லட்சுமி வீட்டில் நகைகளை திருடியதாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த திருட்டுக்கு அவரது கணவர் சுரேஷ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

கணவன், மனைவி கைது

இதையடுத்து கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு பணம் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்