தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்
புதுச்சேரி ஏ.எப்.டி. மில் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.;
புதுச்சேரி
புதுச்சேரி ஏ.எப்.டி. மில் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.
பெரிய மார்க்கெட்
புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டை இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் தற்காலிகமாக கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மில் வளாகத்தில் வியாபாரம் செய்ய அரசு சார்பில் ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இதற்காக ஒவ்வொரு வியாபாரிகளுக்கும் தனித்தனியாக கடைகள் அமைக்க இரும்பு தகரத்தால் கொட்டகை அமைக்கும் பணி நடந்தது.
போலீஸ் பாதுகாப்பு
இதற்கிடையே நேற்று ஏ.எப்.டி. மில் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், தங்களுக்கு நிலுவை சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கியபின் தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணியை தொடங்கவேண்டும் என்று கூறி, பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஏ.எப்.டி. மில் வளாகத்தில் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் பணி மீண்டும் தொடங்கியது. வியாபாரிகள், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்விளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பணியும் துரிதமாக நடக்கிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த வாரம் முதல் தற்காலிக மார்க்கெட் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.