சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்தது

பாண்டி மெரினாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து சென்னை தம்பதி உள்பட 6 பேர் தத்தளித்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.;

Update:2023-08-20 22:59 IST

புதுச்சேரி

பாண்டி மெரினாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து சென்னை தம்பதி உள்பட 6 பேர் தத்தளித்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பாண்டி மெரினா பீச்

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா வருகை தருகிறார்கள். அவர்கள் புதுவையில் உள்ள கடற்கரை, பூங்காக்கள், பாண்டி மெரினா பீச், நோணாங்குப்பம் மற்றும் ஊசுட்டேரி படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பது வழக்கம்

இதற்கிடையே புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கடந்த சில மாதங்கள் முன்பு புதுவை சுற்றுலா துறை சார்பில் பாண்டி மெரினாவில் இருந்து தனியார் படகுகள் மூலமாக சுற்றுலா பயணிகளை கடலுக்குள் அழைத்துச்செல்ல ஓரிரு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சிலர் உரிய அனுமதியின்றி மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய வகை படகில் சுற்றுலா பயணிகளை கடலுக்கு அழைத்து சென்று வருகிறார்கள்.

படகு கவிழ்ந்து விபத்து

இந்த நிலையில் பாண்டி மெரினாவில் இன்று மதியம் 1.30 மணி அளவில் ஒரு படகில் கடலுக்குள் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். இந்த படகில் டிரைவர், பாதுகாவலர் மற்றும் 6 சுற்றுலா பயணிகள் சவாரி செய்தனர். இதில் சென்னை நேதாஜி சாலை ஞானமூர்த்தி நகரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த தம்பதி ராஜசேகர் (வயது 30), சந்தியா (26) மற்றும் 4 ஆண்களும் உடனிருந்தனர்.

படகு பாண்டி மெரினாவில் இருந்து புறப்பட்டு தேங்காய்திட்டு முகத்துவாரம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது கடலில் எழுந்த அலையால் திடீரென படகு கவிழ்ந்தது.

6 பேர் தத்தளிப்பு

இதில் படகில் இருந்தவர்கள் அனைவரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் படகில் விரைந்து சென்று கடலில் தத்தளித்தவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் தம்பதி மட்டும் லேசான காயம் அடைந்தனர்.

படகில் இருந்தவர்கள் பாதுகாப்பு கவசம் (லைப் ஜாக்கெட்) அணிந்திருந்ததாலும், அது முகத்துவாரப்பகுதியில் ஆழம் குறைவாக இருந்ததாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அனுமதி இல்லாத படகு

தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடலில் கவிழ்ந்த படகு உரிய அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை சவாரிக்கு அழைத்து சென்றது தெரிய வந்தது.

அது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்