தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

திருக்கனூர் அருகே பட்டப்பகலில் கட்டிட தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். அடுத்தடுத்த சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.;

Update:2023-05-24 22:11 IST

திருக்கனூர்

திருக்கனூர் அருகே பட்டப்பகலில் கட்டிட தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். அடுத்தடுத்த சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் சம்பவம்

திருக்கனூர் அருகே கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

நகை, பணம் திருட்டு

திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் புதுநகர் முதல் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 47). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார். இவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு, கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டனர்.

பின்னர் அவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த நகை பணம், திருட்டு போயிருந்தது. அதாவது, சாம்பசிவம் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் மறைவிடத்தில் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த தங்க காசுகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 22,600 ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.

போலீஸ் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

வீட்டின் பூட்டை உடைக்காமல் மறைவிடத்தில் இருந்த சாவியை எடுத்து மர்ம நபர்கள் திருடிச்சென்றதால், சாம்பசிவம் குடும்பத்திற்கு அறிமுகமான நபர்களோ அல்லது உள்ளூர் நபர்களோ இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கனூர் பகுதியில் அடுத்தடுத்து பூட்டிய வீட்டுகளில் திருட்டு நடைபெற்றுவரும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்