பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
நெட்டப்பாக்கத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.;
நெட்டப்பாக்கம்
ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பனையடிக்குப்பம் கிராமத்தில் ரூ.19 லட்சம் செலவில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூமிபூஜை போட நேற்று காலை அங்கு சென்றனர்.
ஆனால் அங்கு ஆழ்துளை கிணறு அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பூமிபூஜை செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் இந்த பகுதியில் ஏற்கனவே 2 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது இங்கு எதற்கு ஆழ்துளை கிணறு அமைக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரையாம்புத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்காத பொதுமக்கள் போலீசாரிடமும் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கைவிடுமாறு பொதுமக்கள் அனைவரும் கையெழுத்திட்ட மனுவையும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.