ரவுடி, கஞ்சா வியாபாரி வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

வில்லியனூர், அரியாங்குப்பம் பகுதியில் ரவுடி, கஞ்சா வியாபாரிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். இதில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-07-16 17:09 GMT

வில்லியனூர்

வில்லியனூர், அரியாங்குப்பம் பகுதியில் ரவுடி, கஞ்சா வியாபாரிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். இதில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

'ஆபரேஷன் விடியல்'

புதுச்சேரியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் 'ஆபரேஷன் விடியல்' என்ற பெயரில் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு கஞ்சா கும்பல் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக புதுவையில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இதனை தடுக்கும் வகையில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்த போலீஸ் உயர்அதிகாரிகள் திட்டமிட்டனர்.

அதிரடி சோதனை

அதன்படி, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா தலைமையில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரரெட்டி, வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலய்யன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ், மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா உட்பட 25-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை வில்லியனூர் கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம், மங்கலம் பகுதிகளில் உள்ள ரவுடிகள், கஞ்சா வியாபாரிகளின் வீடுகளில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

வீட்டில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது. அப்போது ஆவணங்கள் இல்லாத இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள் எப்போது வீட்டுக்கு வருவார்கள், தற்போது அவர்கள் என்ன தொழில் செய்து வருகிறார்கள் என்று குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்தனர்.

தப்பி ஓட்டம்

இந்த சோதனையின்போது கரிக்கலாம்பாக்கத்தில் ரவுடி தாடி அய்யனார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தாடி அய்யனாரின் கூட்டாளிகளான கூத்து ஏழுமலை வீட்டில் சோதனை செய்தபோது, பின்பக்கம் வழியாக அவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் துரத்திச்சென்றும் பிடிக்க முடியவில்லை. இந்த திடீர் சோதனையின்போது சிலரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.

அரியாங்குப்பம்

இதேபோல அரியாங்குப்பம் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், திருமுருகன், பழனிசாமி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அதிகாலை 4.30 மணியளவில் அரியாங்குப்பம், மணவெளி, ஓடைவெளி, சண்முகம் நகர், சின்ன வீராம்பட்டினம், பெரிய வீராம்பட்டினம், நோணாங்குப்பம் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை செய்தனர்.

இதில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்