காவல்துறை தலைமை அலுவலகம் ரூ.9 கோடியில் புனரமைக்கப்படும்
காவல்துறை தலைமை அலுவலகம் ரூ.9 கோடியில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி
காவல்துறை தலைமை அலுவலகம் ரூ.9 கோடியில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி கடற்கரை சாலை அருகே காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழமையானது. எனவே இதனை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காவல்துறை தலைமை அலுவலகத்தை பழமை மாறாமல் புனரமைப்பது, சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்தும், காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்வது, காவல்துறை தொடர்பாக சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தனிப்படை
காவல்துறை தலைமை அலுவலகம் ரூ.9 கோடியில் 2 கட்டமாக புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் மேற்கொள்ளும் போது காவல்துறை தலைமை அலுவலகத்தை எங்கு மாற்றுவது என்று முதல்-அமைச்சருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார்பாளையம் பகுதியில் ஒரு பேக்கரி மீது மீண்டும், மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக கடந்த வாரம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எந்த மாதிரியான ஜவுளி பூங்கா அமைப்பது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதேபோல் கடலோர காவல்நிலையத்திற்கு 200 ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கண்காணிப்பு கேமரா
புதுச்சேரி நகர் முழுவதும் ;ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. புதுவை கடற்கரை பகுதியில் சிலர் அனுமதி இல்லாமல் படகுகளை இயக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்று வருகின்றனர். அனுமதி இல்லாமல் சுற்றுலா படகுகள் இயக்கினால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.