4 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலை இல்லாத அவலம்
காரைக்கால் பாரதிதாசன் நகர் அண்ணுசாமி வாய்க்கால் தெருவில்4 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது.
காரைக்கால்
காரைக்கால் பாரதிதாசன் நகர் அண்ணுசாமி வாய்க்கால் தெருவில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைப்பதற்காக, கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டு செம்மண் சாலை அமைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நடைபெறவேண்டிய தார் சாலை அமைக்கும் பணி ஏனோ நடைபெறவில்லை. இன்று நடக்கும் நாளை நடக்கும் என அத்தெருவாசிகள் கடந்த 4 ஆண்டுகளாக காத்திருந்தும், தார் சாலை அமைக்கப்படவில்லை.
இதனால் சாலை குண்டும், குழியுமாக உருவாகி மழை நீர் குளம்போல் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், வருவது மழைக்காலம் என்பதால், அதற்குள் தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட அரசுத்துறைக்கு உத்தரவிடவேண்டும்.
இல்லையேல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடநேரிடும் என தெருவாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.