விவசாயிகளுக்கு அரசு தொல்லை கொடுக்கிறது
விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,விவசாயிகளுக்கு அரசு தொல்லை கொடுக்கிறது என சிவா எம்.எல்.ஏ. பேசினார்.;
பாகூர்
விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,விவசாயிகளுக்கு அரசு தொல்லை கொடுக்கிறது என சிவா எம்.எல்.ஏ. பேசினார்.
ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் வயல்களில் மின் இணைப்புகளுக்கு டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இலவச மின்சாரத்துக்கு வருங்காலத்தில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என கருதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் விவசாய நிலங்களில் மீட்டர் பொருத்துவதை எதிர்த்து தி.மு.க. கூட்டணி சார்பில் பாகூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, தி.மு.க. அவைத்தலைவர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். அப்போது மின்மீட்டர் பொருத்துவதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஒன்றிணைந்து தடுக்கவேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதுவையின் மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தினோம். எந்த வழியிலாவது மின்துறையை தனியார்மயமாக்க ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த அரசில் எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காது. தி.மு.க. போராட்டம் அறிவித்தவுடன் துறை அமைச்சர், விவசாயிகளுக்கு மின்சாரத்தை இலவசமாகவே வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு செல்கின்றனர். தற்போது அவர்களுக்கு தொல்லை கொடுக்கும் வேலையை அரசு செய்து வருகிறது. விவசாயிகள் ஒன்றுகூடி முடிவெடுத்தால் அரசாங்கத்தையே நடத்த முடியாது.
விவசாயிகளுக்கு தனியாக மின் இணைப்பு கொடுக்க உள்ளனர். இப்படி செய்தால் இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரைதான் மின்சாரம் என அறிவித்தால் விவசாயிகள் இரவில் நிலத்தில் சென்று வேலை பார்க்க நேரிடும். இதையெல்லாம் நாம் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்.
மாநில அந்தஸ்து ஏமாற்றுவேலை
சட்டசபையில் மாநில அந்தஸ்து கேட்டு பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் இதுபோன்ற ஒரு தீர்மானம் வரவில்லை என மத்திய மந்திரி எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மாநில அந்தஸ்து கோரிக்கை என்பது ஏமாற்றுவேலை. புதுவையில் நமது தனித்தன்மை, சுய கவுரவத்தை காக்க ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும். அதற்கு தற்போதைய ஆட்சியை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் தொகுதி செயலாளர் அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.