வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக வரைவு வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.

Update: 2023-10-25 16:13 GMT

புதுச்சேரி

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒரே ஒரு எம்.பி. தொகுதியை கொண்ட புதுவை மாநிலத்தில் 950 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.

ஏற்கனவே, தேர்தலுக்கு தேவையான புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்டது. அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தீவிர சோதனைக்கு பிறகு ரெட்டியார்பாளையத்தில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் வரைவு பட்டியல்

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி 1.1.2024, 1.4.2024 மற்றும் 1.10.2024 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான வல்லவன் வெளியிட உள்ளார். அன்றைய தினம் தொடங்கி வருகிற டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும். இதில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளலாம்.

சிறப்பு முகாம்

தேர்தல் பணியாளர்கள் வீடு வீடாக சென்று இந்த பணிகளை மேற்கொள்வர். நவம்பர் மாதம் 4,5 ந் தேதிகளிலும், 18, 19-ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். பொதுமக்கள் அங்கு சென்று தேவையான திருத்த பணிகளை மேற்கொள்ளலாம்.

இதே போல் nspv.in, vote portal.in, voter.eci.gov.in என்ற இணைய தளம் வாயிலாகவும், voter helpline.App செயலி மூலமாகவும் பொதுமக்கள் திருத்தப்பணிகள் மேற்கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி (2024) 5-ந் தேதி வெளியிடப்படும்.

ஆலோசனை

இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தலைமை தாங்கி, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். பிழையில்லா வாக்காளர் பட்டியலை உருவாக்க அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

கூட்டத்தில் துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேலு மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளும், பா.ஜ..க சார்பில் வெற்றிச்செல்வன், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், தி.மு.க. சார்பில் நடராஜன், மற்றும் அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நடவடிக்கை

கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ள ஓட்டுகள் போடுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வது, போலி வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை நீக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை முன் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்