பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்

புதுவையில் பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி கூறியுள்ளார்.

Update: 2023-06-30 18:28 GMT

புதுச்சேரி

பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி கூறியுள்ளார்.

புதுவை வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர் காப்பீட்டு வாரம்

மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் 5-வது பயிர் காப்பீட்டு வாரம் வருகிற 7-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. விவசாயிகளிடையே பயிர் காப்பீடு திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், விவசாயிகளை இந்த திட்டத்தில் பதிவு செய்துகொள்ள ஊக்கப்படுத்துவதற்கும் புதுவை பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் பயிர் காப்பீடு சம்பந்தமான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

இதன்படி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பூரணாங்குப்பம், காட்டேரிக்குப்பத்திலும், 3-ந்தேதி (திங்கட்கிழமை) பரிக்கல்பட்டு, பிள்ளையர்குப்பத்திலும், 4-ந்தேதி கரையாம்புத்தூர், சாத்தமங்கலத்திலும், 5-ந்தேதி நெட்டப்பாக்கம், பி.எஸ்.பாளையத்திலும், 6-ந்தேதி ஏம்பலம், செட்டிப்பட்டிலும், 7-ந்தேதி கிருமாம்பாக்கம், சுத்துக்கேணியிலும் இந்த கூட்டங்கள் நடக்கிறது.

வங்கிக்கணக்கில் நேரடியாக...

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பயிர் காப்பீடு திட்டம் புதுவை, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் தொடர்ந்து செயல்படுத்திட அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தில் பதிவு செய்யும் அனைத்து விவசாயிகளும் அவர்கள் செலுத்த வேண்டிய பிரீமிய தொகையுடன் மானிய தொகையையும் அரசே செலுத்திடும்.

மகசூல் இழப்பு ஏற்படும் இடங்களில் பதிவு செய்த விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீடு தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் மத்திய அரசின் இணைய முகப்பு மூலம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் பயிர் காப்பீட்டு தொகை நேரடியாக செலுத்தப்படும்.

நவீன முறையில் கணக்கீடு

2024-ம் ஆண்டு முதல் வழக்கமான முறையில் நடைபெறும் பயிர் அறுவடை சோதனைகளுடன் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் உதவியுடன் மத்திய அரசின் நவீன மகசூல் கணக்கீட்டு தொழில்நுட்ப முறைகளின்படி மகசூல் கணக்கீடு செய்யப்பட்டு இழப்பீட்டு தொகை கணக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் பாலகாந்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி இன்று தாவரவியல் பூங்காவில் விவசாயிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்