கடையின் மேற்கூரையை உடைத்து காமாட்சி விளக்குகள் திருட்டு

வில்லியனூர் அருகே கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள காமாட்சி விளக்குகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-26 17:00 GMT

வில்லியனூர்

வில்லியனூர் அருகே கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள காமாட்சி விளக்குகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேற்கூரை உடைப்பு

வில்லியனூர் அருகே கீழ்அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 43). அவரது மனைவி உமா (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அய்யனார் ஜி.என். பாளையம் பகுதியில் பித்தளை பொருட்களை பாலீஷ் செய்யும் கடை வைத்துள்ளார்.

சம்பவத்தன்று இவர், வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காமாட்சி விளக்குகள் திருட்டு

கடைக்குள் சென்று பார்த்தபோது சாக்குமூட்டையில் கட்டி வைத்திருந்த பித்தளையிலான 50 காமாட்சி விளக்குகள் மற்றும் கட்டிங் எந்திரம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் யாரோ மேற்கூரையை உடைத்து காமாட்சி விளக்குகள் மற்றும் எந்திரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வில்லியனூர் போலீசில் அய்யனார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்