தூண்டில் முள் வளைவு அமைக்கவேண்டும்
காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பினை தடுக்க தூண்டில் முள் வளைவு அமைக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி
காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பினை தடுக்க தூண்டில் முள் வளைவு அமைக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மீனவர்கள் வலியுறுத்தினார்கள்.
கடல் அரிப்பு
புதுவை காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், சின்ன காலாப்பட்டு, பிள்ளைசாவடி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடல் அரிப்பினை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இன்று அவர்கள் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.வுடன் சட்டசபை அலுவலகத்துக்கு வந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தூண்டில் முள் வளைவு
கடந்த 8-ந்தேதி கடல் அரிப்பு ஏற்பட்டு ஊருக்குள் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக பகுதியான தந்திராயன்குப்பம், பொம்மையர்பாளையம் பகுதியில் கடல் அரிப்பினை தடுக்கும் பொருட்டு கருங்கல் சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் எங்களது கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு 100 மீட்டர் முதல் 200 மீட்டர் வரையில் கடல்நீர் புகுந்துள்ளது.
விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் எங்களது உயிருக்கும், உடமைக்கும் பெரும் சேதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எங்களது கிராமங்களை பாதுகாக்க மேற்கில் இருந்து கிழக்காக கருங்கற்களை கொட்ட வேண்டும். சுமார் 70 மீட்டர் முதல் 100 மீட்டர் வரை சமமான இடைவெளியில் தூண்டில் முள் வளைவுகள் அமைத்து கொடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவினை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.