ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம்

புதுவை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து சென்னை செல்லும் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2023-08-31 17:22 GMT

புதுச்சேரி

புதுவை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து சென்னை செல்லும் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

புதுவை புதிய பஸ் நிலைய வளாக மேம்பாட்டு பணிகள் ரூ.29 கோடியில் நடந்து வருகின்றன. இதற்காக பஸ்நிலையத்தின் மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இதனால் பஸ்கள் பஸ் நிலையத்துக்கு வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் போதிய இடவசதி இல்லாததால் மறைமலையடிகள் சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணிகளும் பஸ் நிலைய பகுதியில் காத்திருக்க போதிய இடமும் இல்லாததால் அவதிக்குள்ளாகின்றனர்.

தற்காலிக பஸ் நிலையம்

எனவே இதுபோன்ற நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் புதுவை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை செல்லும் பஸ்களை (பைபாஸ் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக) இயக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து இன்று பஸ் நிலையமாக மாற்றுவதற்காக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அளவீடு செய்யப்பட்டது. மேலும் அங்கு பயணிகள் காத்திருக்கும் இடம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்றவை செய்து கொடுப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக அந்த இடத்தை உழவர்கரை நகராட்சி வசம் ஒப்படைக்க ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணிமனை

மேலும் கடலூர், விழுப்புரம் செல்லும் பஸ்களை தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்க திட்டம் உள்ளது. அதேபோல் ரோடியர் மில் மைதான பகுதியில் இருந்தும் இயக்கலாமா? என்ற ஆய்வும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்