மாணவர்களின் படிப்பில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாணவர்களின் படிப்பில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-09-04 17:54 GMT

காரைக்கால்

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாணவர்களின் படிப்பில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தி உள்ளார்.

அரசு பள்ளியில் ஆய்வு

நெடுங்காடு தொகுதியில் உள்ள பொன்பேற்றி அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மாணவர்கள் அமர்வதற்கு வசதியாக பெஞ்சுகள், மின்விசிறிகள் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா? என பார்வையிட்டார்.

அப்போது மாணவ, மாணவிகளுக்கு போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை எனவும், கூடுதலாக கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் ராஜவேலு கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். மேலும் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிட்ட கலெக்டர் சிலவகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், வரும் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் படியும், அதற்குண்டான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படியும் தலைமை ஆசிரியரிடம் வலியுறுத்தினார்.

மாணவர்களின் படிப்பில் கூடுதல் கவனம்

இதைத்தொடர்ந்து குரும்பகரத்தில் இயங்கி வரும் கர்மவீரர் காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியையும் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்-ஆசிரியர்கள் மாணவர்கள் சந்திப்பை மாதம் 2 முறையாவது நடத்த வேண்டும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாணவர்களின் படிப்பில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் அப்பள்ளியில் இயங்கும் மதிய உணவு கூடத்தை பார்வையிட்டார். மாணவர்களுக்கு உணவை சுத்தமாக தயாரித்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்