இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பு
உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பினை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.;
புதுச்சேரி
உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பினை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
இட ஒதுக்கீடு
புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்த நிலையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தி தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சசிதரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆணையமானது நகரம், கிராமப்புறங்களில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை கண்டறிய திட்டமிட்டுள்ளது. அதனை கண்டறிந்து பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கவும் உள்ளது.
அங்கன்வாடி ஊழியர்கள்
இது தொடர்பாக நகராட்சிகள், கிராம பஞ்சாயத்து பகுதிகளில் தொகுதி வாரியாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினை சேர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் தகவல்களை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு கணக்கெடுப்புக்கு தேவையான விவரங்கள் அடங்கிய குறிப்பேடு வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அங்கன்வாடி ஊழியர்களிடம் குறிப்பேடுகளை வழங்கி கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
ஓராண்டாகும்
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், பிரகாஷ்குமார், ஓய்வுபெற்ற நீதிபதிகள் சசிதரன், ராமபத்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கணக்கெடுப்பு முடிந்து அதன் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு அதன் பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். இதனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற ஓராண்டுக்கும் மேலாகும் என்று கூறப்படுகிறது.