புதுவை மாணவ, மாணவிகள் ராணுவ கல்லூரியில் சேர வாய்ப்பு

புதுவை மாநில மாணவ, மாணவிகள் ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி கூறியுள்ளார்.;

Update: 2023-09-21 18:34 GMT

புதுச்சேரி

புதுவை மாநில மாணவ, மாணவிகள் ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி கூறியுள்ளார்.

புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணுவ கல்லூரி

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் அடுத்த ஆண்டு 8-ம் வகுப்பில் சேருவதற்கு புதுவை யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான நுழைவுத்தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக 1-7-2024 அன்று 11½ வயதுக்கு குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமலும் இருக்கவேண்டும். மேலும் மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் 1-7-2024-ல் சேரும்போது 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். புதுவை மாணவ, மாணவிகளுக்கு எழுத்து தேர்வு பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வித்துறை வளாகத்தில் நடைபெறும்.

ஆன்லைன் மூலம்...

விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் பெறுவதற்கு www.rimc.gov.in என்ற வலைதளத்தில் பொதுப்பிரிவினர் ரூ.600, பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான சாதி சான்றிதழுடன் ரூ.555 செலுத்தி பதிவிறக்கம் செய்யப்பட்ட பணம் செலுத்திய ரசீது மற்றும் தங்கள் முகவரியை தெளிவாக குறிப்பிட்டு விரைவு அஞ்சல் மூலமாக THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, GARHI CANTT, DEHRADUN, UTTARAKHAND- 248003 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் இணை இயக்குனர் அலுவலகம், 2-ம் தளம், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம், அண்ணாநகர், புதுச்சேரி 605003 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதிக்குள் வந்துசேர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்