கால்நடை மருத்துவ படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள்
கால்நடை மருத்துவ படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.;
புதுச்சேரி
கால்நடை மருத்துவ படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
மாணவர் பரிமாற்ற திட்டம்
புதுவை குரும்பாப்பட்டில் அரசின் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இங்கு பி.வி.எஸ்.சி. (கால்நடை மருத்துவம்) படிக்கும் மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டது.
இதையொட்டி மாணவர் பரிமாற்ற திட்டத்துக்காக பல்வேறு வெளிநாட்டு பல் கலைக்கழகங்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் சார்லஸ் ஸ்டூவர்ட் பல்கலைக்கழகம், இத்தாலியின் போகியா பல்கலைக்கழகம் மற்றும் டுசியா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மாணவர்கள் செல்ல உள்ளனர்.
ரங்கசாமி வாழ்த்து
புதுவையில் இருந்து 20 மாணவ, மாணவிகள் வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு கால்நடை உற்பத்தி அறிவியல் துறையில் உள்ள அதிநவீன உபகரணங்களை பயன்படுத்தும் வாய்ப்பை பெறுவார்கள். மேலும் மருத்துவ சிகிச்சை வசதிகள், பண்ணை உபகரணங்கள் பயன்பாடு, இறைச்சிகூட மற்றும் பல பரிமாண ஆராய்ச்சிக்கான வசதிகளை பயன்படுத்தும் வாய்ப்பை பெறுவார்கள்.
வெளிநாட்டுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இன்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கால்நடை மருத்துவக்கல்லூரி டீன் செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.