மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
புதுவையில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
புதுச்சேரி
மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் இனப்படுகொலை தடுத்த நிறுத்தக்கோரியும், பெண்களை நிர்வாணப்படுத்தியதிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுவை மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று மாலை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சிவா, வைத்தியநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
இதேபோல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பாகூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கொம்யூன் தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஆனந்த், மாதர் சங்க மாநில செயலாளர் இளவரசி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாதர் சங்க கொம்யூன் செயலாளர் வதணி, பொருளாளர் வளர்மதி, மாதர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அவர்கள் நெற்றியில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.