ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு டி.ஜி.பி. ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-07-06 16:40 GMT

புதுச்சேரி

புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு டி.ஜி.பி. ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் நிலையங்களில் ஆய்வு

புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசன் போலீஸ் நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி இன்று காலை முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது அவர், அந்தந்த போலீஸ் நிலையங்களில் உள்ள கைதிகள் அறை, ஆவணங்கள் அறை, போலீசார் ஓய்வறைகளை பார்வையிட்டார். அப்போது ஆண்-பெண் போலீசாருக்கு தனித்தனியாக அடிப்படை வசதிகள் உள்ளதா? போலீஸ் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகிறதா? கோப்புகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் போலீசாரிடம் குறைகளையும் கேட்டார்.

உத்தரவு

ஆய்வின் போது போலீசார் முன்னிலையில் பேசிய அவர், 'புதுவையில் அமைதியான சூழ்நிலை நிலவ சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க கூடுதல் 'பீட்' பணியை மேற்கொள்ள வேண்டும். பிரச்சினை செய்யும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசனை, அந்தந்த பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம், போதை பொருட்கள் நடமாட்டத்தால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். போதை பொருட்கள் புழக்கத்தை போலீசாரால் மட்டுமே தடுக்க முடியாது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். எனவே போதை பொருட்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

பாகூர்

முன்னதாக பாகூர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்த டி.ஜி.பி., முகப்பில் வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி போலீஸ் எம்பலத்தை ஆச்சரியத்துடன் பார்த்தார். மற்ற போலீஸ் நிலையங்களிலும் இந்த எம்பலத்தை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் இனியன், கலைச்செல்வன், கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், முருகானந்தம், பழனிச்சாமி, நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்