போதை பொருள் விற்பனையை தடுக்கவேண்டும்
காரைக்காலில் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு தலங்கள் பகுதியில் போதை பொருள் விற்பனையை தடுக்கவேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால்
காரைக்காலில் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு தலங்கள் பகுதியில் போதை பொருள் விற்பனையை தடுக்கவேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
காரைக்கால் மாவட்டத்தில் போதை பொருளை முற்றிலும் ஒழிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.
மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், துணை கலெக்டர்கள் ஜான்சன், பாஸ்கரன் போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்பிரமணி, நிதின் கவ்ஹால் ரமேஷ் மற்றும் நலவழித்துறை, கல்வித்துறை, வருவாய்துறை, சமூக நலத்துறை, அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
கூட்டத்தில் கலெக்டர் குலோத்துங்கன் பேசியதாவது:-
காரைக்கால் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க, பள்ளி மாணவர்களுக்கு சமூக நலத்துறை மூலம் பல்வேறு கட்டங்களாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து, பறிமுதல் செய்யவேண்டும்.
மேலும் கடல் வழியாகவோ, சாலை மார்க்கமாகவோ போதைப்பொருள் காரைக்காலுக்கு கடத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து தடுக்கவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் குலோத்துங்கன் கூறினார்.