அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைப்பு

டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-14 16:36 GMT

புதுச்சேரி

டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார்.

டெங்கு பாதிப்பு

புதுவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்புக்குள்ளான கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் பலியாகி உள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க புதுவை அரசு ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இன்று இங்கு 7 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியானது. அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கவர்னர் ஆய்வு

இந்தநிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினார். டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டார்.

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆரம்ப அறிகுறிகள்

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு பாதிப்புக்குள்ளான 2 ஆண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுவை அரசு ஆஸ்பத்திரியில் எலிசா எனப்படும் டெங்கு பாதிப்பை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதிக காய்ச்சல், உடல்வலி இருந்தால் உடனே பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் வீட்டிலேயே இருந்து வெகுநாட்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். அவ்வாறு செய்யாமல் ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போதே ஆஸ்பத்திரிக்கு வந்துவிட வேண்டும்.

தாமதம் கூடாது

உயிரிழப்புகளை தடுக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோம். டெங்கு பாதித்தவர்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் அதுவும் தயாராக உள்ளது. இதுதொடர்பாக தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரக்கூடியவை. எனவே ஏ.சி., பிரிட்ஜ் போன்றவற்றில் தண்ணீர் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொசுக் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தாலே உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வரவேண்டும். இதில் தாமதம் ஏதும் கூடாது. டெங்கு அறிகுறி இருந்தால் உடனடியாக எலிசா சோதனை மேற்கொள்ளப்படும்.

நிபா வைரஸ்

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் மாகி பகுதியில் அதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய அறிகுறிகளுடன் வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் சிகிச்சைக்காக தொடங்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 பேரில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்