சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு பூஜை

புதுவையில் உள்ள சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-06-25 18:16 GMT

புதுச்சேரி

ஆனி திருமஞ்சனத்தையொட்டி புதுவையில் உள்ள சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிறப்பு அபிஷேகம்

புதுச்சேரி காந்திவீதியில் பிரசித்திபெற்ற வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் உட்பிரகாரத்தில் நடராஜர் தனி சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த சன்னதியில் ஆண்டுதோறும் ஆனி உத்திரத்தன்று 16 வகையான பொருட்களால் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்.

அந்த வகையில் இன்று ஆனி உத்திரம் என்பதால் நடராஜருக்கு சந்தனம், பால், தயிர், திருநீறு, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலையில் விசேஷ அலங்காரத்தல் நடராஜருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அக்கா சாமி கோவில்

காராமணிக்குப்பம் சிவசுப்பிரமணய கோவிலில் உள்ள நடராஜருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் மிஷன் வீதி காளதீஸ்வரர் கோவில், வைத்திக்குப்பம் அக்கா சாமி கோவில் மற்றும் பல்வேறு சிவன் கோவில்களில் நாளை (திங்கட்கிழமை) காலை நடராஜருக்கு ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்