பள்ளிவாசல், கடற்கரை சாலையில் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல், கடற்கரை சாலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.;

Update:2022-07-10 21:54 IST

புதுச்சேரி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல், கடற்கரை சாலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

பக்ரீத் பண்டிகை

ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதனை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த உடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மை குழு உறுப்பினர் முகமது மற்றும் கிளை நிர்வாகிகள் உள்பட ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினர்.

சுல்தான்பேட்டை

வில்லியனூர் அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் அதிக அளவில் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். பக்ரீத் பண்டிகையையொட்டி இங்குள்ள பிரசித்தி பெற்ற முகமதியார் பள்ளிவாசல் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்