'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்

புதுவையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகளை விரைவுப்படுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2023-07-12 17:38 GMT

புதுச்சேரி

'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகளை விரைவுப்படுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டம்

புதுவை நகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அண்ணா திடல், புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. பெரிய மார்க்கெட் கட்டுமான பணி தொடங்கப்படாத நிலையிலேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

பல்வேறு தரப்பினரும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பணிகளை செய்ய முடியாமல் ஒப்பந்தததரர்கள் திணறி வருகின்றனர். தொடர் போராட்டங்களால் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

சீராய்வு கூட்டம்

இந்த சூழ்நிலையில் ரூ.930 கோடி செலவிலான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 133 பணிகள் குறித்து சீராய்வு கூட்டம் கவர்னர் மாளிகையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை நிர்வாக அதிகாரி மணிகண்டன், போக்குவரத்துத் துறை செயலாளர் முத்தம்மா, கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, கலெக்டர் வல்லவன் மற்றும் பொதுப்பணி, போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி, சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

17 கழிவுநீர் திட்ட பணிகள், 4 வடிகால் பணிகள் மற்றும் 17 மின்சார பணிகள் உள்ளிட்ட 38 திட்ட பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன. தேசிய கட்டுமான கழகத்துக்கு வழங்கப்பட்ட தாவரவியல் பூங்கா, பெரிய மார்க்கெட், பெரிய வாய்க்காலில் மேம்பாட்டு பணிகள் மற்றும் கடற்கரை சாலையில் உள்ள புதிய கட்டிட புனரமைப்பு பணிகள் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைந்து முடிக்க...

இந்த கூட்டத்தில், திட்டங்களை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், புதிய திட்டங்களுக்கான முன்வரைவு அறிக்கைகளை தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்