திறன் வளர்த்தல் பயிற்சி
மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் தென்னை மரத்தின் நண்பர்கள் என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான திறன்வளர்த்தல் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது.;
காரைக்கால், அக்.12-
காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் தென்னை மரத்தின் நண்பர்கள் என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான திறன்வளர்த்தல் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. பயிற்சிக்கு தலைமை தாங்கிய வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெயசங்கர், இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையை களைவதற்கு, எந்திரமயமாக்கல் ஒன்றே தீர்வாக இருக்கும். அந்த வகையில் தென்னை மரம் ஏறும் எந்திரம் கொண்டு சுலபமாக மரம் ஏற முடியும். இதனால் நேரம் குறையும். வேலை எளிதாகும் என்றார்.
பயிற்சியில் காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி பிரிவு தலைவர் வெங்கடேஸ்வரன், தென்னை விவசாயிகளின் பிரச்சினைகள், அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார். முகாமில், காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 இளைஞர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் கதிரவன் அனைவரையும் வரவேற்றார். முடிவில், உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் அரவிந்த் நன்றி கூறினார்.