பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முற்றுகை

பணிநிரந்தரம் செய்யக்கோரி புதுவை பொதுப்பணித்துறை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-21 16:51 GMT

புதுச்சேரி

பணிநிரந்தரம் செய்யக்கோரி புதுவை பொதுப்பணித்துறை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பொதுப்பணித்துறை ஊழியர்கள்

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் 190 பேர் வவுச்சர் ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் புதுச்சேரி வாரிசுதாரர்கள் சங்கத்தினர் புதுவை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை இன்று மதியம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்திற்கு வாரிசுதாரர்கள் சங்க கவுரவ தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். தலைவர் ஜெயசந்திரன், செயலாளர் கோபிகண்ணன், துணை செயலாளர் இளவரசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது சாரதி, அருண் என்ற ஊழியர்கள் பொதுப்பணித்துறை அலுவலக நுழைவு வாயில் வளைவு மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவாதிசிங் மற்றும் பெரியகடை போலீசார் அங்கு விரைந்து வந்து, ஊழியர்களை சமாதானம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது வாரிசுதாரர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்