சித்த மருத்துவர்கள் பற்றாக்குறை

புதுவையில் சித்த மருத்துவர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-09 17:56 GMT

கோட்டுச்சேரி

புதுச்சேரி அரசு மாநிலம் முழுவதும் அலோபதி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாயின. மருத்துவர்களுக்கு அரசுப் பணியைத் தர அரசு தயாராக இருந்தும் காரைக்காலில் பணியாற்ற மறுக்கின்றனர்.

மக்கள் தொகை, நகர அபிவிருத்தி கடந்த 20 வருடங்களில் அதிகரித்தும், காரைக்காலில் அரசு பொது மருத்துவமனை மற்றும் நலவழி மையங்களில் மருத்துவர்கள் பணியில் நிரப்பல் என்பது கானல் நீராகவே நீடிக்கிறது. தற்போது புதுச்சேரி மாநிலம் முழுவதும் 28 சித்த மருத்துவர்கள் பணியிடங்கள் உள்ளன.

புதுச்சேரியில் 20 சித்த மருத்துவர் பணியிடங்களில் 17 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காரைக்காலில் 8 பணியிடங்களில் 6 நிரப்பப்பட்டுள்ளன. 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. கொரோனாவுக்குப் பிறகு சித்த மருந்தின் அவசியம், மகத்துவம் பொதுமக்களுக்கு தெரிந்ததால், கிராமப்புற மருத்துவ மையங்களில் சித்த மருத்துவர், சித்த மருந்தகத்துக்கான புரிதல் அதிகரித்திருக்கிறது.

புற நோயாளிகள் பிரிவு மட்டுமன்றி, உள் நோயாளிக்கான பிரிவும் தற்போது காரைக்கால் மாவட்டத்தில் அவசியமாகியுள்ளது. மேலும் காரைக்காலில் பண்டித ஜவஹர்லால் நேரு, வேளாண் அறிவியல் மையத்தில் பரந்த நிலப்பகுதி காணப்படுகிறது. இங்கு மூலிகை சாகுபடி, பதப்படுத்தல், மதிப்புக்கூட்டல் செய்யப்பட்டால், சித்த மருத்துவத்துக்கான மருந்து ஆலையையும் காரைக்காலில் நிறுவ வாய்ப்பிருக்கிறது.

நலவழித்துறையில் பல்வேறு மாற்றங்கள், புதுமைகளை செய்து வரும் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி மேற்கண்ட பணியிடங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்