ஆமைவேகத்தில் சர்வீஸ் சாலை பணி

திருபுவனையில் ஆமை வேகத்தில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-07-06 16:17 GMT

திருபுவனை

திருபுவனையில் ஆமை வேகத்தில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

சர்வீஸ் சாலை

புதுச்சேரி-விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்டிடங்கள், கடைகள், மரங்கள் அகற்றப்பட்டன. தற்போது 4 வழிச்சாலை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

திருபுவனை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் வடக்கு பகுதியில் கோர்ட்டு உத்தரவுப்படி பனைமரங்கள் அகற்றப்படாமல் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தெற்கு பகுதி வழியாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

பறக்கும் புழுதி

இதற்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சாலை அமைப்பதற்காக பள்ளம் மட்டும் தோண்டப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளதால் கரடு முரடாக காட்சியளிக்கிறது. இந்த பள்ளத்தில் தினசரி பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

சாலையில் புழுதி பறப்பதால் அந்த பகுதியில் கடைகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சர்வீஸ் சாலை பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்