விதை நெல், உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு

காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காரைக்கால் விவசாயிகளுக்கு விதை நெல், உரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-30 17:04 GMT

புதுச்சேரி

காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காரைக்கால் விவசாயிகளுக்கு விதை நெல், உரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுவை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறுவை சாகுபடி

மேட்டூர் அணை இந்த ஆண்டு மே மாதம் 24-ல் திறக்கப்பட்டு காவிரிநீர் பாசன மாவட்டங்களுக்கு கல்லணையில் இருந்து 27-ந்தேதி திறக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களில் ஆழ்குழாய் பாசன வசதியுள்ள பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு 700 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

இவ்வருடம் காவிரியில் நீர் குறுவை சாகுபடிக்கு வரும் சூழல் இருப்பதால் சுமார் 1,500 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி இருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பரப்பில் குறுவை சாகுபடி செய்வதற்கு தேவையான இடுபொருட்கள் அனைத்தும் காலத்தில் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரை விதை நெல் விற்பனைக்கு 26 அரசு மற்றும் தனியார் முகவர்களுக்கும், உர விற்பனைக்கு 24 அரசு மற்றும் தனியார் முகவர்களுக்கும் பூச்சிமருந்து விற்பனைக்கு 18 அரசு மற்றும் தனியார் முகவர்களுக்கும் விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

உரம்-விதை நெல்

வேளாண்துறையால் தினசரி அடிப்படையில் விதைகள், உரம், பூச்சி மருந்து இருப்பு கண்காணிக்கப்பட்டு விவசாய இடுபொருட்கள் விவசாயிகளுக்கு தடையில்லாமல் கிடைக்க அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் குறுவை சாகுபடிக்காக இந்த மாதம் மட்டும் 11 மெட்ரிக் டன் அளவுக்கு கோ-51, ஏ.டி.டி-43, ஏ.டி.டி-45 நெல் ரக விதைகள் சான்று பெற்ற விதை முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது 17.20 மெட்ரிக் டன் டி.கே.எம்.-9, ஏ.டி.டி.-43, ஏ.டி.டி.-45, கோ-51, ஏ.டி.டி.-53 நெல் ரக விதைகள் இருப்பில் உள்ளது.

விவசாயிகளுக்கு மேலும் விதைகள் தேவைப்படும்பட்சத்தில் போதுமான விதைகள் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரங்களை பொறுத்தவரையில் 185 மெட்ரிக் டன் யூரியா, 62 மெட்ரிக் டன் டி.ஏ..பி., 63 மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளன. மேலும் தேவைக்கேற்ப தட்டுப்பாடின்றி உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய இந்திய உணவுக்கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.

பயிர் காப்பீடு

2020-21-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்தமைக்கான இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு நிறுவனம் விரைந்து வழங்க அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே காரைக்கால் மாவட்ட விவசாயிகள் காவிரியில் வரும் நீரை கொண்டு குறுவை சாகுபடி செய்வதற்கான வாய்ப்புள்ள நிலங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்