காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ரகசிய ஹோமம்
கோஷ்டி பூசலை சமாளிக்க புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ரகசிய ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜை நடந்தது.;
புதுச்சேரி
கோஷ்டி பூசலை சமாளிக்க புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ரகசிய ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜை நடந்தது.
மாநில காங்கிரஸ் தலைவர்
புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக ஏ.வி.சுப்ரமணியன் இருந்து வந்தார். அவரது தலைமையில் கடந்த சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து அவர் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. எனவே அவர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார்.
வைத்திலிங்கம் எம்.பி. நியமனம்
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறவும், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலை தடுக்கவும் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. தலைவர் பதவியை பிடிக்க புதுவை தலைவர்கள் டெல்லிக்கு சென்று காய் நகர்த்தி வந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதிய தலைவராக வைத்திலிங்கம் எம்.பி.யை நியமனம் செய்து சமீபத்தில் டெல்லி காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில தலைவராக வைத்திலிங்கம் எம்.பி. நாளை (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் பதவியேற்க உள்ளார். விழாவில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் சிலர் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் நிலையில் கோஷ்டி பூசலை சமாளிக்க வேண்டியது பெரிய விஷயமாக உள்ளது.
ரகசிய ஹோமம்
எனவே கோஷ்டி பூசலை சமாளிக்கும் விதமாக, புதுவை வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை ரகசிய ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அவரது உதவியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இது குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் கேட்டபோது,'காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலை சமாளிக்கவும், புதிய தலைவராக வைத்திலிங்கம் எம்.பி.பொறுப்பேற்பதால் கணபதி ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜை நடந்தது'' என தெரிவிக்கப்பட்டது.