ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ.6 லட்சம், நகை கொள்ளை

திருபுவனை அருகே ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ. 6 லட்சம் ரொக்கம் மற்றும் 6 பவுன் தாலிச்சங்கிலியை உடம்பு முழுவதும் எண்ணெய் தடவி வந்த ஆசாமி கொள்ளையடித்து சென்றான்.

Update: 2023-08-19 16:45 GMT

திருபுவனை

திருபுவனை அருகே ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ. 6 லட்சம் ரொக்கம் மற்றும் 6 பவுன் தாலிச்சங்கிலியை உடம்பு முழுவதும் எண்ணெய் தடவி வந்த ஆசாமி கொள்ளையடித்து சென்றான்.

ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர்

திருபுவனை அருகே உள்ள நல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 63). இவர் அரசு பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தேவகி (56). கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டுமனை விற்ற பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை குடும்பத்தார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் பின்புறம் உள்ள கதவினை நைசாக திறந்து உள்ளே வந்த ஆசாமி ஒருவன், தேவகி படுத்திருந்த கட்டிலின் அருகில் சென்று ரூ.6 லட்சம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு திரும்பினான்.

உடல் முழுவதும் எண்ணெய்

இருட்டில் தரையில் இருப்பது சரியாக தெரியாததால், தேவகி அருகில் குடிப்பதற்காக தண்ணீர் வைத்திருந்த சொம்பு ஆசாமியின் காலில் பட்டு, அது உருண்டு விழுந்து சத்தம் எழுப்பியது. உடனே தேவகி விழித்துக் கொண்டு திருடன், திருடன் என சத்தம் போட்டார். உடனே அந்த ஆசாமி தேவகியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச்செயினையும் அறுத்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் பின்பக்க கதவு வழியாக ஓடி மறைந்தான்.

திருட வந்த ஆசாமி, உடல் முழுவதும் எண்ணெய் பூசிக்கொண்டு, உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. திருடும்போது யாராவது பிடித்தால், அவர்களிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காக உடலில் எண்ணெய் தடவி வந்தவன் டவுசர் கொள்ளையனாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சொம்பு சத்தம் கேட்டு எழுந்து வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மகன்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

மோப்ப நாய் வரவழைப்பு

தகவலின்பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிர்வேல், ஏட்டு ஜானகிராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் புதுச்சேரியில் இருந்து துப்பறியும் நாய் டான் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. நாய் கொள்ளை நடந்த வீட்டிலிருந்து பனந்தோப்பு வரை ஓடிச் சென்று நின்றது.

இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்