தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

தவளக்குப்பம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.;

Update:2023-06-20 22:19 IST

அரியாங்குப்பம்  

தவளக்குப்பம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சாந்தா (வயது 70). இவர் கடந்த 22-ந் தேதி அதிகாலையில் வீட்டில் படுத்திருந்தபோது, மர்மநபர் உள்ளே புகுந்து சாந்தா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்சென்றான்.

இதேபோல் சென்னையை சேர்ந்த பெண் வக்கீல் தமிழ்ச்செல்வி தவளக்குப்பம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது அவரது அறையில் புகுந்து 7 பவுன் தங்க வளையலை மர்மநபர் திருடிச்சென்றுவிட்டார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவங்கள் குறித்து அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியின் வீடு மற்றும் பெண் வக்கீல் தங்கியிருந்த விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் வக்கீல் தங்கியிருந்த அறைக்குள் சென்று வருவது பதிவாகி இருந்தது. அந்த நபரின் புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தியதில், தஞ்சாவூர் ஓரத்தநாடு தாலுகா காரியாவிடுதி பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (37) என்பது தெரியவந்தது.

கொள்ளையன் கைது

இந்த நிலையில் நேற்று இரவு பூரணாங்குப்பம் அய்யனார் கோவில் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் பதுங்கி இருந்த ஆனந்தராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மூதாட்டி சாந்தாவிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து மொத்தம் 10 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.

கைதான ஆனந்தராஜ், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனந்தராஜ் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்