மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

வில்லியனூர் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-14 16:40 GMT

வில்லியனூர்

வில்லியனூர் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுக்கடைக்கு எதிர்ப்பு

வில்லியனூர்-பத்துக்கண்ணு சாலையில் ரெயில்வே கேட் அருகே பட்டாணிக்கலம் பகுதியில் புதிதாக தனியார் மதுபான கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று இரவு அங்கு சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்களை கொண்டு வந்து இறக்கியதாக தெரிகிறது.

ஊரின் மத்தியில் மற்றும் நரிக்குறவர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாலை மறியல்

ஆனால் இதையும் மீறி மதுக்கடை திறக்க முடிவு செய்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வில்லியனூர்-பத்துக்கண்ணு சாலையில் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்லியனூர் தாசில்தார் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்