வெள்ளத்தில் தத்தளிக்கும் ஏனாம் படகுகள் மூலம் மக்கள் மீட்பு
கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஏனாம் தத்தளிக்கிறது.;
புதுச்சேரி
கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஏனாம் தத்தளிக்கிறது.
கோதாவரி ஆறு
புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியமான ஏனாம் பகுதியில் கோதாவரி ஆறு வங்கக் கடலில் கலக்கிறது. தற்போது கோதாவரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தவுலேஸ்வரம் அணைக்கட்டும் திறக்கப்பட்டு அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று கோதாவரி ஆற்றில் வினாடிக்கு 13 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
படகுகள் மூலம் மீட்பு
அபாயகரமான அளவை தாண்டி தண்ணீர் ஆற்றில் வருவதால் ஏனாம் பாலயோகி நகர், குரு கிருஷ்ணாபுரம், ராஜீவ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஆற்றில் நேற்று வினாடிக்கு 15 லட்சத்து 19 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை போலீசாரும், தீயணைப்பு படையினரும் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர்.
ராட்சத மோட்டார்கள்
ஊருக்குள் புகுந்த நீரை வடிய வைக்க ஏனாம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.