சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 20 வீடுகள் அகற்றம்
புதுவை தேங்காய்த்திட்டு பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 20 வீடுகள் அகற்றப்பட்டன. போலீசாருடன் சிலர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
புதுச்சேரி
புதுவை தேங்காய்த்திட்டு பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 20 வீடுகள் அகற்றப்பட்டன. போலீசாருடன் சிலர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு
புதுவை நகரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை, நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தேங்காய்த்திட்டு பகுதியில் சிலர் ரோட்டை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர்.
பெரும்பாலும் சிமெண்டு ஷீட்டுகள், தகரம் கொண்டு இந்த வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருசில வீடுகள் செங்கல் கொண்டு கட்டப்பட்டிருந்தன. இந்த வீடுகளை அகற்ற நகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அதை ஏற்று சிலர் அந்த வீடுகளை காலி செய்திருந்தனர். ஆனால் சிலர் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர்.
தள்ளுமுள்ளு
இந்தநிலையில் நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் உரிமையாளர்கள் சிலர் நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
அதன்பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்தன. இன்று 20 வீடுகள் அகற்றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் காரணமாக தேங்காய்திட்டு பகுதியில் பரபரப்பு நிலவியது.
போலீஸ் பாதுகாப்பு
இதேபோல் இந்திராகாந்தி சிலை முதல் சிவாஜி சிலை வரை பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் இன்று ஈடுபட்டனர். சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டிகளை அகற்றினார்கள். பெரும்பாலான கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அகற்றிக்கொண்டனர். பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க அங்கு கோரிமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.