புதுச்சேரி விடுதலை நாள் விழா ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி விடுதலை நாள் விழா குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.;
காரைக்கால்
அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் இந்தாண்டு விடுதலை நாள் விழா குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி பேசியதாவது:-
புதுச்சேரி விடுதலை நாள் விழா சிறப்பாக கொண்டாட கடற்கரை சாலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு காரைக்கால் மதகடியில் இருந்து கடற்கரை சாலைக்கு சென்று வர இலவச பஸ் விடவேண்டும். நலவழித்துறை மூலம் தற்காலிக மருத்துவ முகாம் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். குடிநீர், இருக்கை வசதி செய்து தர வேண்டும்.
நகராட்சி நிர்வாகத்தின் மூலம் கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அனைத்து தலைவர்களின் சிலைகளையும் சுத்தப்படுத்தி, வர்ணம் பூசி 3 நாட்கள் விளக்குகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் துணை கலெக்டர்கள் ஜான்சன், செந்தில்நாதன், போலீஸ் சூப்பிரண்டுகள் நித்தின் கவுஹால் ரமேஷ், சுப்பிரமணியன், செய்தி மற்றும் விளம்பர துறை உதவி இயக்குனர் குலசேகரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்து கொண்டனர்.