புதுச்சேரி: உயிரிழந்த கோவில் யானையின் தந்தம் - முதல்-மந்திரி ரங்கசாமியிடம் வனக்காப்பாளர் வழங்கினார்

உயிரிழந்த யானை லட்சுமியின் தந்தத்தை புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியிடம் வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி வழங்கினார்.;

Update:2023-03-30 16:16 IST

புதுச்சேரி,

புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. புதுச்சேரியின் முதல்-மந்திரியாக ஜானகிராமன் இருந்தபோது இந்த கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.

லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமிக்கு பக்தர்களும் யானைக்கு பழம், அருகம்புல் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தனர். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த கோவிலுக்கு வந்து யானை லட்சுமியை பார்த்துவிட்டுச் செல்வார்கள்.

இந்த நிலையில் யானை லட்சுமி கடந்த நவம்பர் 30-ந்தேதி காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது. அப்போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த யானையின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

உயிரிழந்த யானை லட்சுமிக்கு கற்சிலை வைத்து நினைவிடம் அமைக்கப்படும் என்றும், அதன் தந்தத்தை கேரளாவில் உள்ள கோவில்களில் பராமரிப்பு செய்வது போல் அலங்கரிக்கப்பட்டு மணக்குள விநாயகர் கோவிலில் வைக்கப்படும் என்றும் புதுச்சேரி சுற்றுலாத்துறை மந்திரி லட்சுமி நாராயணன் தெரிவித்திருந்தார்.

அதன்படி வனத்துறையின் வசம் இருந்த யானை லட்சுமியின் தந்தம் இன்று புதுச்சேரி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியிடம் வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்